பிரம்ம ஞான சபை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதன் தமிழ்நாடு கிளை அடையாற்றில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி தாரா நல்லூர் கீரக்கொல்லை தெரு பகுதியில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்ம ஞான சபையின் கிளை உள்ளது.இதன் நடுவே ஒரு பெரிய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் மாதந்தோறும் சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தியானம் மற்றும் நல்லொழுக்க பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த பல வருட காலமாக அங்கு தியான பயிற்சி நடைபெறாத காரணத்தால்
கட்டிடம் பழுது அடைந்து காணப்பட்டது. மேலும் அந்த கட்டிடத்தை சுற்றி நிறைய காலி இடங்கள் இருப்பதால் அங்கு முட்புதர்கள் வளர்ந்து காடு போல காட்சி அளித்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது புதிதாக பிரம்ம ஞான சபையின் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜசேகரன் முயற்சி எடுத்து அந்த கட்டிடத்தை சுத்தம் செய்து மேலும் அந்த கட்டிடத்தை சுற்றி உள்ள முட்புதர்களை புல்டோசர் கொண்டு அகற்றி புதிதாக அந்த காலி இடத்தில்
பல்வேறு கடைகளை கட்டி வாடகைக்கு விட ஏற்பாடு செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிடத்தின் பின் பகுதியில் திருடர்களை கண்காணிக்க புதிதாக நவீன கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சபையின் கட்டிடம் பூட்டப்பட்ட நிலையில் இன்று காலை சபையின் செயலாளர் ராஜசேகரன்
சபைக்கு வந்து கட்டிடத்தை திறந்து சபையின் உள்ளே சென்று பார்த்தார். அப்பொழுது அங்கு உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அந்த பீரோவில் இருந்த ரூ 50 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த போது அண்மையில் திருடர்களை கண்காணிக்க பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவின் சி.டி. ஆர். திருடப்பட்டு உள்ளது தெரிய வந்தது.மேலும் கட்டிடத்தில் பின் பகுதியில் சென்று பார்த்த போது அங்கு இருந்த நவீன கேமரா திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து செயலாளர் ராஜசேகரன் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரம்ம ஞான சபையின் கட்டிடம் முழுவதும் சோதனை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.
இதற்கிடையில் கட்டிடத்தின் பின் பகுதியில் பூங்கா பின்புறத்தில் குட்டி மாரியம்மன் கோவில் அருகில் ஒரு இருசக்கர வாகனத்தில் இருந்து கேமராவை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கேமரா எப்படி அங்கு சென்றது? யார் தூக்கி சென்றது ?என்பது குறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நீண்ட காலமாக சபை மூடப்பட்டு இருந்த காரணத்தால் சமூக விரோதிகள் தொடர்ந்து தீய செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. தற்பொழுது கேமரா பொருத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்து இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படு கின்றனர்.
