அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது, முதல்வர் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது என அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர் வினோத், “அனைவரும் இங்கு மூத்த தலைவர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் தேவை என்பதை அறிவீர்கள். விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடித்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் தர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுரக, சன்னரக நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், வெற்றி வான்மகள் எனும் டிரோன் பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூரியனால் அனைவருக்கும் வியர்க்கும் நிலையில் சூரியனுக்கே வியர்க்க வைத்தார் முதல்வர் விஜய். இது வெற்று பட்ஜெட் அல்ல.. தமிழ்நாடு விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது, முதல்வர் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது” என்றார்.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார் என்பதையும், எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்த பிறகும் அங்கே ஏவுகணைகளை ஏவ முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.
