வேலூர்: முள்ளிப்பாளையத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த ஐஸ் கட்டி தயாரிக்கும் ஆலையில், சோதனை ஓட்டத்தின்போது திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த ஜூன் 21ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், வேலூர் முள்ளிப்பாளையத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட ஐஸ் கட்டி தயாரிக்கும் ஆலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது, சிலிண்டர் குழாயில் இருந்து அமோனியா வாயு கசிந்தது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆலைக்குள் சென்று அமோனியா வாயு கசிந்த சிலிண்டரின் வால்வை மூடினர். பின்னர் தலா 50 கிலோ எடை கொண்ட 6 அமோனியா வாயு சிலிண்டர்களில் இருந்த வாயுவை நீரில் கரைத்து, பாதுகாப்பாக அகற்றும் பணியில் பல மணி நேரம் ஈடுபட்டனர்.
அமோனியா வாயு கசியத் தொடங்கியபோது கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளான சிலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, உரிய அனுமதியின்றி ஆலையைத் தொடங்கியதாகக் கூறப்படும் எக்ரம் என்பவரை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், சட்டவிரோதமாக அமோனியா வாயு சிலிண்டர்களை விநியோகம் செய்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமோனியா வாயு கசிவு காரணமாக முள்ளிப்பாளையம் பகுதியில் பல மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
