காந்தி மார்க்கெட்டில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது…
திருச்சி காந்தி மார்க்கெட் தர்பார் மேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகக் காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். சக்திவேலிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூபாய் ஆயிரத்து 800 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது…
திருச்சி பழைய மதுரை மெயின் ரோடு வாரச்சந்தை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்குப் புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த எடமலைப்பட்டி புதூர் நேரு தெருவை சேர்ந்த முருகேசன் ( 34 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல் பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்றதாகத் தூத்துக்குடியை சேர்ந்த ஆதிலிங்கம் (வயது36) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 200 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் கைது
திருச்சி, திண்டுக்கல் சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பவர் ஹவுஸ் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்குச் சிறப்புச் சப் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்ஜேக்கப் தலைமையில் போலீசார் அங்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு பெண் சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் அமர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் ராம்ஜிநகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேந்தர் என்பவரின் மனைவி வேம்பரசி (31) என்பதும், ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேம்பரசியைக் கைது செய்து, அவரிடமிருந்து 2.600 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் வேம்பரசிக்குக் கஞ்சா கிடைத்தது எப்படி எங்கிருந்து வாங்கினார் கஞ்சாவை வேறு எங்கேயாவது கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தாரா? என்பது குறித்துப் போலீசார் விசாரனண செய்து வருகின்றனர்.
