சென்னை பெரம்பூர் பகுதிக்குட்பட்ட வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் முறையான சுழற்சி இன்றி சாலைகளில் தேங்குவதும், வீடுகளுக்குள் புகுவதுமான பிரச்சனை தொடர்கதையாகி வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதாரச் சீர்கேட்டால் அப்பகுதி வாசசிகளும் முதியோர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையில் பொதுமக்கள் மக்கள் பிரதிநிதியை நாட முடிவு செய்தனர்.
கழிவுநீர் பிரச்சனையை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தி வேதாந்தா முருகப்பா தெரு பொதுமக்கள் திரளாகப் புறப்பட்டு வந்து பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்தின் வாயிலில் நின்று கோஷங்களை எழுப்பி அவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
