தவெக ஆட்சி 100-வது நாளான இன்று 2024 இல் தொடக்கப் பள்ளிக்கான நியமனத்தேர்வு மற்றும் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் புதிய அரசாணை மூலம் பணி நியமனம் கோரி நியமனத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இது குறித்து ஆசிரியர் ரஞ்சினி கண்களில் சிவப்புத் துணி கட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது கடந்த 2013, 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் பலமுறை தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று உள்ளோம் ஆனால் பணிநியமனம் வழங்கவில்லை
2018 ஆம் ஆண்டு அரசாணை 149 படி தகுதித்தேர்வு மட்டுமல்லாமல் நியமனத் தேர்விலும் தேர்ச்சிப் பெற வேண்டும் என கூறப்பட்டது. 2018 இல் அரசாணை வெளியிட்ட 8 ஆண்டுகளில் 2024-ல் ஒரு முறை மட்டுமே நியமனத் தேர்வு நடைபெற்றது.
தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட மாவட்ட வாரியான காலிப் பணியிடங்கள் 3,108 என சேர்த்து 17,130 காலிப்பணியிடங்கள் உள்ளது. எனவே 2019 முதல் 2026 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தொடக்கக்கல்வி புள்ளிவிவரப்படி கூறப்பட்டுள்ள மொத்த காலிப் பணியிடங்கள் 28,400 ஆகும்.
தற்காலிக ஆசிரியர் பணி நியமங்களை நீக்கி தற்போது உள்ள காலிப்பணியிடங்களை தகுதி உள்ள 21,515 ஆசிரியர்களுக்கு புதிய அரசாணை மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும். என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு உள்ள ஒரே துறை இது மட்டுமே அதிலும் இந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள ஆசிரியர்களில் சுமார் 16,000 பேர் பெண் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வயது 40 கடந்த நிலையில் இந்தப் பணியை மட்டுமே நம்பி உள்ளனர். பலமுறை தேர்ச்சிப் பெற்றும் தற்போது தினக்கூலிகளாகவும் எந்தப் பணியும் இன்றி வீட்டில் அடிமை வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
தவெக ஆட்சி அமைந்து 100-வது நாளான இன்று தமிழ்நாடு முதல்வரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் தாய் உள்ளத்தோடு எங்கள் மீது கருணை காட்டி புதிய அரசாணையை பிறப்பித்து எங்கள் குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என கூறினர்.
