தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்; திருச்சியில் 23ஆம் தேதி நடைபெறுகிறது – துரை வைகோ எம்பி பேட்டி.
திருச்சி எம்பி துரை வைகோ, தென்னூர் உழவர் சந்தை பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் கூறுகையில் ன..
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய இரண்டும் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்ட நிலையில், அதற்கான போதிய ஆதரவு கிடைக்காததால் மீண்டும் அந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவால் சிறுபான்மையினர் நடத்தும் அரசு சாரா அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். இந்த மசோதாக்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட ஆறு மாநகாட்சிகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. திருச்சியில் வரும் 23ஆம் தேதி இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் இந்திய கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கருத்தரங்கம் அரசியல் கூட்டமோ அல்லது பொதுக்கூட்டமோ அல்ல. தமிழகத்தையும் நாட்டையும் பாதிக்கக்கூடிய இந்த மசோதாக்களை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வாக இது அமையும் என்றார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர்,
மக்கள் பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச பொருளாதார வசதிகள் இருப்பது அவசியம். சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பொருளாதார ஆதாரம் இருந்தால் மட்டுமே அவர்கள் முழுமையாக மக்கள் பணியில் ஈடுபட முடியும். அடிப்படை பொருளாதார வசதிகள் இல்லாத சூழ்நிலை, சில நேரங்களில் ஊழலுக்கு வழிவகுக்கும்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மிகப்பெரிய அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார்கள். லஞ்ச லாவண்யம் இல்லாத அரசை நடத்தி வருகின்றனர். எந்த அலுவலகங்களிலும் லஞ்சம் வாங்குவதில்லை. அதிகாரிகள் மத்தியில் ஒரு சில இடங்களில் புழக்கம் இருந்தாலும் பார்ட்டி ஃபண்ட், கட்சி நிதி உள்ளிட்ட கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவது குறைந்துள்ளது என்றார்.
மூன்றாவது குழந்தைக்கான சலுகை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு காலத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதை கட்டுப்படுத்துவதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களின் காரணமாக தமிழகத்தில் மொத்தப் பிறப்பு விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளதாகவும், மக்கள் தொகை குறைவு எதிர்காலத்தில் மற்றொரு பிரச்சினையாக மாறக்கூடும் என்பதால் மூன்றாவது குழந்தைக்கான சலுகையைத் தொடர்வது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றது குறித்து திமுகவின் முரசொலி நாளிதழில் வெளியான செய்தி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அழைப்பின் பேரில் வருகை தரும் விருந்தினர்கள் பங்கேற்பது இயல்பான ஒன்று.
நடிகை என்பதற்காக ஒருவரின் பங்கேற்பைத் தவறாகச் சித்தரிக்கக் கூடாது. நடிகை திரிஷா விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்று சென்றுள்ள நிலையில் அதை விமர்சனப் பொருளாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
