கோவை, தடாகம் சாலை K.N.G. புதூர் பிரிவு பகுதியில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையிலேயே வைத்து 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
கோவை, தடாகம் சாலை K.N.G. புதூர் பிரிவில் ‘அபி ஹோட்டல்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் உள்ள சமையல் கூடத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அருகிலேயே அரசு டாஸ்மாக் கடை அமைந்து இருந்தாலும், டாஸ்மாக் நேரம் முடிந்த பிறகும் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு இங்கு மதுபானங்கள் தாராளமாக விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.
ஹோட்டல் சமையல் அறைக்குள் வைத்து மதுபானங்களைப் பாட்டில்களில் ஊற்றிக் கொடுப்பதும், வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும் தொடர்பான காட்சிகளை உணவகத்திற்கு வந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு உள்ளார்.
அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தையே சட்டவிரோத மது விற்பனைக் கூடமாக மாற்றி 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்று வரும் உணவக உரிமையாளர் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
