இன்புளுயென்சா காய்ச்சல் பாதிப்பு கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டெங்கு பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் அப்போலோ புற்றுநோய் மையத்தை மட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக விரிவாக்கம் தரம் உயர்த்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது,
தமிழகத்தில் அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் லட்சியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கட்டமைப்பில் தனியார் துறைக்கும் முக்கிய பங்கு இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகள் வழங்கும் தரமான சிகிச்சை மற்றும் பராமரிப்பை அரசு மருத்துவமனைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் தனியார் மருத்துவமனைகள் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்த அமைச்சர், தனியார் துறையையும் உள்ளடக்கிய முறையான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சூழலை உருவாக்குவது அரசின் நோக்கம் என தெரிவித்தார்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டெங்கு பரப்பும் கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகும் என்பதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, தீராத உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே சிகிச்சை பெறாமல் உடனடியாக மருத்துவமனையை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 25 ஆயிரம் டெங்கு உறுதி செய்யப்பட்ட பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதில் பாதியளவே பாதிப்புகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், இதை வைத்து டெங்கு பாதிப்பு குறைந்துவிட்டதாக கருத முடியாது என்றும், அடுத்தடுத்த மாதங்களில் காய்ச்சல் பரவும் காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) மூலம் உறுப்பு தானம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் காத்திருப்பு பட்டியல் அடிப்படையிலேயே உறுப்புகள் ஒதுக்கப்படுவதாகவும், இதற்காக குழு மற்றும் நிலையான வழிகாட்டுதல்கள் உள்ளதாகவும் கூறினார்.
அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பதிவு செய்தவர் என்ற பாகுபாடு இல்லாமல், தகுதி மற்றும் பதிவு முன்னுரிமையின் அடிப்படையில் உறுப்புகள் கிடைக்கும் வகையில் அமைப்பு செயல்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், உறுப்பு தானம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில், எந்த அளவுக்கு கூடுதல் தகவல்களை வெளிப்படையாக வெளியிட முடியுமோ, அதனை எதிர்காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரம் ஏற்கனவே முதலமைச்சரின் கவனத்தில் இருப்பதாக கூறினார்.
முதலமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, இது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தெருநாய்களுக்கு உணவு வழங்குவது குறித்து அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு விளக்கம்
தெருநாய்களுக்கு உணவு வழங்கக்கூடாது என்று தான் கூறவில்லை என அமைச்சர் அருண் ராஜ் விளக்கம் அளித்தார்.
தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தே தான் பேசியதாகவும், குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள் அங்குள்ள தெருநாய்களை பராமரிப்பதில் தவறில்லை என்றும் கூறினார்.
ஆனால் வேறு பகுதிகளில் இருந்து வந்து ஒரு இடத்தில் உணவளிப்பதால் அந்தப் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
தெருநாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள அரசு பெரிய திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், பொதுமக்களும் அரசுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாகவும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘Institutes of State Importance’ திட்டத்தின் கீழ், சில அரசு மருத்துவமனைகளை முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாகத் தேர்வு செய்து உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் அரசின் கவனத்தில் இருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவ கல்லூரியில் புதிய கூட்ட அரங்கத்தை திறந்து வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,தமிழகத்தில் H1N1 காய்ச்சல் பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை.
ஒவ்வொரு ஆண்டும் h1n1 காய்ச்சல் பாதிப்பு இருப்பது வழக்கம் தான். ஆனால் கால நிலைக்கு ஏற்ப பாதிப்பு அதிகமாகும் மாதம் வேறுபடும். கடந்தாண்டு ஜனவரி மாதங்களில் அதிகமாக இருந்தது, ஆனால் இந்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்தாண்டு 1288 பேருக்கு இன்ஃபுளுயென்சா காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இந்தாண்டு, 1558 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அச்சப்பட தேவையில்லை எனவும், பொதுமக்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். மழைக்காலமாக இருப்பதால் மழைநீர் அருகில் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
காய்ச்சல் பாதிக்கப்பட்டோரை அதிகமான பரிசோதனை செய்வதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது எனவும் கூறினார்.
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அளவு 25லட்சமாக அதிகரித்த நிலையில் அதற்கான தேதி அறிவிப்பு, நிதி அறிவிப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருவதாகவும், அது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
