தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவதற்கான கால இடைவெளி, நடிகர்களின் சம்பள விகிதம், தயாரிப்புச் செலவுகள் கட்டுப்பாடு மற்றும் திரையரங்கக் கட்டணப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்திருந்தது. அதன்படி, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் திரைப்பட வெளியீடுகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டது.
இந்நிலையில், திரையுலகின் பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட முக்கிய ஆலோசனைகளுக்குப் பிறகு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
