திருவள்ளூர் அருகே இறுதி ஊர்வலத்தில் நடனமாடியபோது கஞ்சா போதையில் தவெக வாலிபர் வெட்டி கொ* செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கொ*யில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த அகரம் கிராமத்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். அந்த பெண்ணின் சாவில் சிலர் நடனம் ஆடி கொண்டிருந்தனர். அப்போது 2 பிரிவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினர், அகரம் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் மணிகண்டன் (26) என்ற இளைஞரை கழுத்தில் வெட்டினர். இதனால் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடம்பத்தூர் கசவநல்லாதூர், முத்தமிழ் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (23) மற்றும் அவரது நண்பர்களான கடம்பத்தூர் அருகே உள்ள பானம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (எ) பார்த்திபன் (26), கடம்பத்தூரை சேர்ந்த கோகுல் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கஞ்சா போதையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் கொ* வழக்கில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், முக்கியமான குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கடம்பத்தூர் அகரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்றிரவு திருவள்ளூர்-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான மற்றும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேசி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கைதான 3 பேரும் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கார்த்திகேயனும், மணிகண்டனும் நண்பர்கள். இதில், கார்த்திகேயனிடம் மணிகண்டன் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. கார்த்திகேயன் கேட்டபோது, காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதனால் கார்த்திகேயனின் வீட்டிலிருந்து 2 பவுன் நகையை மணிகண்டன் திருடி சென்று, அதனை விற்று பணத்தை கொடுத்துள்ளார். கார்த்திகேயன் வீட்டிலேயே நகையை திருடி, அவருக்கு பணத்தை மணிகண்டன் கொடுத்ததால் கடும் ஆத்திரமடைந்தார். இந்நிலையில்தான் துக்க நிகழ்ச்சியில் கார்த்திகேயனின் நண்பர் தீபக் (26) கலந்து கொண்டார். அப்போது நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் தீபக்கை மணிகண்டன் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதனால் 3 பேரும் சேர்ந்து மணிகண்டனிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 3 பேரும் கஞ்சா போதையில் மணிகண்டனை கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளனர். இவ்வாறு தெரியவந்தது.
