திருச்சி மாவட்டம், லால்குடி அருகே விவசாயி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தடுத்த அவரது மகனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த திண்ணியம், முள்ளால் கிராமத்தை சேர்ந்தவர் அயுமனன். இவரது மனைவி ரூபி. இவர்களது மகன் அபிமன்யூ.
அயுமனன் நேற்று இரவு மது அருந்தி கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த சிலருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஏற்பட்டு வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் இன்றுகாலை மீண்டும் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்பதற்காக சென்றார்.
அப்போது மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட அப்பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் எதிர் தரப்பினருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் ஜெகனுக்கும் அயுமனனுக்கும் இடையே வாய்த்தராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஜெகன் தான் வைத்திருந்த கத்தியால் அயுமனனை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அயுமனன் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தடுக்க வந்த அவரது மகன் அபிமன்யுவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அயுமனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாய்த்தகராறில் தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
