திருச்சியைச் சேர்ந்த மனோகரனின் மகள் ஷோபனாவின் 9 மாத குழந்தை அதிதி நிலானி, ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (SMA) வகை-2 எனப்படும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது குழந்தை அதிதி நிலானி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைக்கு தேவையான சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து சுமார் ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி மருந்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் கிரவுட் ஃபண்டிங் மூலம் சிகிச்சைக்குத் தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தையின் தாத்தா மனோகரன் மற்றும் அவரது மனைவி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை அதிதி நிலானிக்கு தேவையான சிகிச்சையை தொடர்ந்து வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் உரிய உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
