“கோவைக்காரங்க மனசே தனி தான்” ; குட்ஸ் செட் ரோடு மேம்பாலத்தில் மாற்றுத் திறனாளிக்கு ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ்ச்சி உதவி!
காலால் மூன்று சக்கர சைக்கிளைத் தள்ளிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்: இணையத்தில் வைரலாகும் கோவை நெகிழ்ச்சி வீடியோ!
“அடுத்தவங்களுக்கு ஒரு உதவினா ஓடிப் போய் உதவி செய்றதுல நம்ம கோவை ஆட்டோ டிரைவர்ஸ அடிச்சுக்கவே முடியாதுங்க!” என்பதைப் பறைசாற்றும் வகையில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சிகரமான உதவி குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பயனாளர்களின் இதயங்களை வென்று வருகிறது.
கோவை, குட்ஸ் செட் ரோடு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இன்று காலை மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர கைசைக்கிளைக் (Tricycle) கைகளால் சிரமப்பட்டு அழுத்தியபடி மேடான பாதையில் ஏற்ற முயன்று கொண்டு இருந்தார்.
மேம்பாலத்தின் செங்குத்தான ஏற்றத்தில் சைக்கிளை நகர்த்த முடியாமல் அவர் கடும் சிரமத்தை எதிர்கொண்டார்.
அப்போது அந்த வழியாக வந்த கோவை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மாற்றுத் திறனாளியின் நிலையைக் கண்டு உடனடியாக உதவ முன்வந்தார். தனது ஆட்டோவை நிதானமாக இயக்கியபடியே, ஒரு காலால் அந்த மாற்றுத்திறனாளியின் மூன்று சக்கர சைக்கிளைப் பின்புறமாகத் தள்ளி, அவர் சிரமமின்றி மேம்பாலத்தின் மேடான பகுதியைக் கடக்க உதவி செய்தார்.
தான் செல்லும் அவசரத்திலும், பிறரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர் செய்த இந்த சாதுரியமான மற்றும் அன்பான உதவி அங்கு இருந்த வாகன ஓட்டிகளை நெகிழ வைத்தது.
இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை அப்பகுதியில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“இதுதான் நம்ம கோவை மனிதநேயம்!” என்றும், “எப்போதும் கோவை ஆட்டோ ஓட்டுநர்களின் உதவி மனப்பான்மை தனித்துவமானது” என்றும் அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு மனதாரப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
