இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் படம் கடந்த 26ம் தேதி வெளியானது. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அதிகளவில் கிளாமர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுபற்றி நடிகை டாப்சி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழில் ஆடுகளம் உள்பட பலபடங்களில் நடித்துள்ள அவர் கூறுகையில், ‘சமீபத்திய மாதங்களில் வெளியான சில திரைப்படங்களை என் குடும்பத்தினருடன் பார்த்து கொண்டிருக்கும்போது, நான் சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதா என்று யோசித்தேன். இப்போது எடுக்கப்படும் இந்த வகையான படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.
எனது சினிமா பயணம் காலத்தை கடந்து நிற்க வேண்டும் என்று விரும்புகிறேன். 10 வருடங்கள் கழித்து பார்க்கும்போது எனது தேர்வுகள் எனக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்த கூடாது. இப்போது உருவாக்கப்படும் இந்த வகையிலான படங்கள் மட்டுமே எடுக்கப்படும் சூழல் நிலவியிருந்தால், என்னை போன்ற ஒருவருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்திருக்காது. ஒரு நடிகையாக, தற்போது உருவாக்கப்படும் இது போன்ற திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருக்க தான் விரும்பவில்லை’ என்றார். டாப்சி நேரடியாக எந்த படத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அண்மையில் நடிகர் யஷ் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் வன்முறை கதைகளோடு வெளியான ‘டாக்ஸிக்’ மற்றும் அதற்கு முந்தைய சில ‘டாக்ஸிக் மஸ்குலினிட்டி’ படங்களை மறைமுகமாக தாக்கியே அவர் பேசியுள்ளார் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
