Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய இலங்கை இளைஞர் யார்?

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய இலங்கை இளைஞர் யார்?

 இந்திய இசை உலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். அவரது இசைக்காகவே திரைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ரஹ்மான், இசையில் மட்டுமல்லாமல் தனது எளிமையான அணுகுமுறை மற்றும் தன்னடக்கமான குணத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதில் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். திறமை இருந்தும் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு தனது இசையில் பணியாற்றும் வாய்ப்பையும், தனது குழு நடத்தும் கச்சேரிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியான பாடல்களை வித்தியாசமான முறையில் வாசித்து வந்த இலங்கை இளைஞர் ஒருவரை, ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு பாராட்டிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

இலங்கையைச் சேர்ந்த கிரிஜன் உதயகுமார், தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியான பாடல்களைத் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி டம்ளர்களை இசைக்கருவியாகப் பயன்படுத்தி தொடர்ந்து வாசித்து பதிவிட்டு வருகிறார்.

வித்தியாசமான முறையில் அவர் இசைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தன. மேலும், தனது வீடியோக்களில் ஏ.ஆர். ரஹ்மானை டேக் செய்யுமாறு தனது ரசிகர்களிடமும் கிரிஜன் கேட்டுக்கொண்டிருந்தார். அவரது வீடியோக்கள் டிரெண்டான நிலையில், பலரும் கமெண்ட் செக்ஷனில் ஏ.ஆர். ரஹ்மானின் சமூக வலைதளப் பக்கத்தை டேக் செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மான் கிரிஜன் உதயகுமாரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு அவரது திறமையைப் பாராட்டினார். இந்த எதிர்பாராத சந்திப்பை கிரிஜன் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “இது நடைபெற்றதற்குக் காரணம் நீங்கள் கொடுத்த அளவற்ற அன்புதான். அனைவருக்கும் நன்றி. ரஹ்மான் சாருக்கும் நன்றி” என்று கிரிஜன் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானுடன் நடைபெற்ற இந்த வீடியோ கால் தொடர்பான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கிரிஜன் உதயகுமாரின் திறமையைப் பாராட்டிய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!