கும்பகோணம் பாலக்கரை அருகே பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பாலக்கரை பகுதியில் ஆட்டோ நகர் அமைந்துள்ளது. இதனை ஒட்டியுள்ள அருள்நகர், பழனிச்சாமி நகர் உள்ளிட்ட நகர விரிவாக்கப் பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை அருள்நகர் பகுதியில் யாசகம் பெற்று வந்த வயதான முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைச் சுற்றி வந்த பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கோபு என்ற ஆட்டோ ஓட்டுநர், நாய்களிடமிருந்து முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் சிறிது நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருள்நகர், பழனிச்சாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
