தாராபுரம் அருகே, பெற்றோரை பராமரிப்பதாக கூறி ரூ.2 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை செட்டில் மெண்ட் மூலம் பெற்றுக்கொண்ட மகன், பின்னர் பெற்றோரை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சொத்தை மீட்டு 76 வயது வயதான தம்பதியிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசர்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (76). இவரது மனைவி புஷ்பாத்தாள் (70) விவசாயியான இத்தம்பதிக்கு, தண்டபாணி (40), என்ற மகனும், பானுமதி (45) என்ற மகளும் உள்ளனர், மகளுக்கு திருமணமாகி கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
முத்துசாமி, தாசர்பட்டி அருகே உள்ள மூண்டுவேளம் பட்டி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 2002ம் ஆண்டு விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்தார். முத்துச்சாமிக்கு வயதான காரணத்தாலும், இவரது மனைவிக்கு எழுந்து நடமாட முடியாத நிலையிலும் உள்ளதால் விவசாயத்தை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், முத்துசாமி மகன் தண்டபாணி நான் உங்கள் எல்லோரையும் பார்த்துக்கொள்கிறேன் என உறுதியளித்துள்ளார். இதை நம்பிய முத்துசாமி தனது பெயரில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை மகன் தண்டபாணி பெயரில் எழுதிக்கொடுத்தார்.
தனது பெயருக்கு நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரையும், தனது அக்கா பானுமதி, அவருடைய 2 குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த முத்துசாமி மகனிடமிருந்து தான் எழுதிக் கொடுத்த 4 ஏக்கர் விவசாய நிலத்தை திருப்பி தனக்கே பெற்றுக் கொடுக்குமாறும், தான் எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்து என்னுடைய விவசாய நிலங்களை மீட்டுத் தருமாறு கோரியும் தாராபுரம் வழக்கறிஞர்கள் மூலம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு செய்து இதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இப்புகாரின் மீது 12 வார இடைவெளிக்குள் உரிய முறையில் விசாரணை நடத்தி மூத்த குடிமக்களான முத்துசாமி தம்பதியினருக்கு அவர்களது சொத்தை மீட்டுக் கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜாவுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி தம்பதியினரிடம் அவர்கள் பெற்ற மகனே பொய்யான உத்தரவாதத்தை அளித்து மூத்த குடிமக்களை ஏமாற்றி எழுதி வாங்கிய 4 ஏக்கர் விவசாய நிலத்தையும், அது எந்த நிலையில் இருந்தாலும் அதை முழுவதுமாக மீட்டு மனுதாரர் முத்துச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், முத்துசாமி தனது மகன் தண்டபாணிக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டு அதற்கான உத்தரவையும் முத்துசாமி மற்றும் அவரது மகள் பானுமதி, இவர்களது வழக்கறிஞர்கள் முன்னிலையில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா வழங்கினார். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
