Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

 ரயில், பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது-11,200 கிலோ பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையப் பகுதிகளில் தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்பட பல்வேறு போதைபொருள் கடத்தல், பதுக்கி விற்பனை செய்பவர்களை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்பேரில் இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில், செங்குன்றம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜமீஸ் பாபு தலைமையில் காவலர்கள் ரமேஷ், முத்துகுமரன் ஆகியோர் தனிப்படை போலீசார் மீஞ்சூர், செங்குன்றம், மணலி, எண்ணூர், மணலி புதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செங்குன்றம் காவல் சோதனைசாவடியில் நேற்றிரவு வழக்கம் போல் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேக நிலையில் 2 பேர் முதுகில் மிகப்பெரிய மூட்டைகளுடன் நடந்து வருவதை பார்த்து தனிப்படை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். இதில், அவர்கள் இருவரும் விற்பனைக்காக 11,200 கிலோ கஞ்சா வைத்திருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

பின்னர் இருவரையும் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் பீர் பாரி (25), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் (30) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து செங்குன்றம் வரை அரசு பேருந்தில் கஞ்சாவை கொண்டு வந்துள்ளனர். அதற்குமேல் வாகனத்தில் கஞ்சாவுடன் சென்றால் பிடிபட்டுவிடுவோம் என அஞ்சி, இருவரும் மூட்டைகளாக சுமந்தபடி நடந்து சென்றுள்ளனர். மேலும், இந்த கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து சில்லறை விற்பனையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு திட்டமிட்ட சந்தன்குமார், கிஷோர் பீர் பாரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!