கடவூரில் ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, பள்ளி கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட முள்ளிப்பட்டி, பாலவிடுதி, மாவத்தூர் ஊராட்சிகளில் உள்ள கிராம பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும்.
மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டு காரணமாக விவசாய மோட்டார் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று கடவூர் சாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
