கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தூதரக தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித் ஆகியோர் திடீரென திருமணம் செய்து கொண்டனர்.கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலமாக தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ் சேர்க்கப்பட்டார்.
இவருடன் தூதரக முன்னாள் ஊழியரான பி.எஸ்.சரித் என்பவரும் கைது செய்யப்பட்டு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். தற்போது திரிபுனித்துரா அருகே இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த மாதம் கொச்சி மரடு நகராட்சிக்கு உட்பட்ட திருநெட்டூர் வடக்கு பாட்டுப்புரக்கல் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, திருமண சான்றிதழைப் பெறுவதற்காக திருநெட்டூர் மகாதேவர் கோயில் அருகே உள்ள கொச்சின் தேவசம் போர்டு அலுவலகத்திற்கு இந்த தம்பதியினர் நேரில் சென்றனர்.
மேலும் திருமணத்தை பதிவு செய்ய மரடு நகராட்சியிலும் விண்ணப்பித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்வப்னா சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டு, ‘எங்களது திருமண வாழ்க்கைக்கு அனைவரின் பிரார்த்தனையும் ஆசிகளும் வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ஸ்வப்னா சுரேசுக்கு கடந்த 2000ம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவருடன் முதல் திருமணம் நடந்து, அது 2008ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பின்னர் 2011ம் ஆண்டு ஜெயசங்கர் என்பவரை 2வது திருமணம் செய்த நிலையில் அதுவும் விவாகரத்தானது. தற்போது சரித்துடன் நடந்துள்ளது அவருக்கு 3வது திருமணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
