சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர் பணியிடங்களில் தற்போது காலியாக உள்ள 4724 காலிப்பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 21,000 மாத ஊதியத்தில் நிரப்ப மருத்துவத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வன்மையாக எதிர்க்கிறது.
அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, சுமார் 4,75 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் அரசு வேலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது.
இந்தத் தற்காலிக முறையில் பணியமர்த்தப்படும் செவிலியர்களுக்கு வருங்காலங்களில் பணி நிரந்தரம் பெறும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. குறைந்த ஊதியத்தில் எந்தவிதப் பணிப் பாதுகாப்பு உத்தரவுமின்றி பணியமர்த்தப்படுவது சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.
மேலும் இந்தத் தற்காலிக முறைப் பணியமர்வு என்பது மருத்துவத்துறையின் தரத்தைக் குறைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் இந்தத் தற்காலிகச் செவிலியர்கள் பொது சுகாதாரத் துறையின் கீழ் கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்படும் நிலையில், கிராமப்புறங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரம் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
கொரோனா காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே அதிலிருந்து மீண்டு வரச் சிரமப்பட்ட நிலையில், நமது மருத்துவத்துறை அதை எளிதாகக் கையாண்டு அதிலிருந்து மீண்டு வர மிக முக்கியமான காரணம் பொது சுகாதாரத் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததுதான். அப்படியான ஒரு சேவைத் துறையில் தற்காலிகப் பணியமர்வு என்பது மிகவும் ஆபத்தானது.
மருத்துவத்துறையின் ஊழியர்கள் நிரந்தரத் தன்மையுடன் இருந்தால் மட்டுமே அந்தத்துறை தொடர்ந்து நிரந்தரத் தன்மையுடன் இயங்கும். ஆகவே நலனையும் தமிழ்நாடு அரசு, பணியமர்த்தப்படும் ஊழியர்களின் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவைக் கைவிடுவதுடன், மருத்துவத்துறை தொடர்ந்து நிரந்தரத் தன்மையுடன் இயங்க அனைத்துப் பணியாளர்களையும் நிரந்தரத் தன்மையுடன் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
