கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில், புதிய கடைக்கான பெயர் பலகையை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் ஒருவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த சுதந்திர பாண்டியன் (வயது 30 )பெயர் பலகை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று பள்ளப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள புதிய கட்டிடத்தின் மேற்புறத்தில், கடைக்கான பெயர் பலகையை பொருத்தும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சுதந்திர பாண்டியன் பெயர் பலகை பொருத்துவதற்காக துளையிடும் இயந்திரத்தை இயக்க மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் நிலைதடுமாறி மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்த சக தொழிலாளர்கள் மீட்டு பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர், சுதந்திர பாண்டியன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரவக்குறிச்சி போலீசார், விசாரணை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின் இணைப்பு வழங்கப்பட்ட விதம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்குச் சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சுந்தரபாண்டியனுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
