மத்திய பிரதேசத்தில் பாஜக பெண் எம்பி ஹிமாத்ரி சிங் தனது கணவரை பரஸ்பர சம்மதத்துடன் முறைப்படி விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஷாடோல் மக்களவைத் தொகுதி பாஜக பெண் எம்பி ஹிமாத்ரி சிங் (37) என்பருக்கும், அந்த மாநில பழங்குடியினர் ஆணையத்தின் முன்னாள் தலைவரான சிங் மராவி என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு அனூப்பூர் மாவட்டம் ராஜேந்திரகிராமில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் அங்கு ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு இவர்களுக்கு கிரிஷா சிங் என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்தச் சூழலில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நாளடைவில் பெரும் குடும்பப் பிரச்னையாக உருவெடுத்தது. இதனால் இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை முற்றிலும் தடைபட்டதை அடுத்து, கடந்த 2021ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழத் தொடங்கினர். தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த இருவரும், ராஜேந்திரகிராம் நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், தம்பதியினர் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய சட்டப்படி 6 மாத கால அவகாசம் அளித்தது.
எனினும் சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தங்கள் மகளின் படிப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ஹிமாத்ரி சிங் ஏற்றுக்கொண்டதோடு, கணவரிடம் இருந்து எந்தவித ஜீவனாம்சமும் கோரவில்லை. இதுகுறித்து ஹிமாத்ரி சிங் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் முறைப்படி பிரிந்துவிட்டோம்’ என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
