Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அவதூறு பேச்சு… நக்கீரன் பிரகாஷ் கைது

அவதூறு பேச்சு... நக்கீரன் பிரகாஷ் கைது

மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண் யூடியூபர் பற்றி பேசியதாக 8 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகாரில், முன் விசாரணையின்றி நேரடியாக கைது செய்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது. இந்த கைது நடவடிக்கை அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா என்றும் சந்தேகம் எழுப்பி, அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது. தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தாமோதரன் பிரகாஷ் கைது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், ”சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி, பெ/வ.38 என்பவர் தனி நபர் நடத்தி வரும் ‘சவுக்கு மீடியா’ என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணி செய்து வருவதாகவும் வார பத்திரிகையின் நிருபர் தாமோதரன் பிரகாஷ் பெயர் தெரியாத ஒரு நெறியாளருடன் சேர்ந்து, ‘HIV சவுக்கு மாலதியும் கல்யாணம்’ என்ற தலைப்பில், மாலதியை பற்றி அவதூறாகவும், அவருக்கு HIV உள்ளது என்றும், மாலதியின் புகைப்படத்தை காண்பித்து, தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பொய்யாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும் வீடியோ பதிவிட்டு கடந்த ஜனவரி-2026 மாதம் “கிங் 24 X 7” என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளதால், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாலதி கொடுத்த புகாரின்பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act), தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இப்புகார் தொடர்பாக S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய தாமோதரன் பிரகாஷ், வ/58, த/பெ.தாமோதரன், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை என்பவரை இன்று (16.09.2026) கைது செய்து, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாமோதரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில், ”புகாருக்கும் நடவடிக்கைக்கும் 8 மாத இடைவெளி ஏன்?

அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணத் தோன்றுகிறது.

பத்திரிகைத்துறையில் கால் நூற்றாண்டிற்கு மேல் பயணித்து வரும் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

நக்கீரன் இதழ் வெளியிட்ட பல புலனாய்வு செய்திகளில் தாமோதரன் பிரகாஷ் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. சங்கரராமன் கொலை வழக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் யாருக்கும் அஞ்சாமல் தாமோதரன் பிரகாஷ் அவர்கள் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் பல உண்மையை வெளிக்கொண்டு வந்தது.

இன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தாமோதரன் பிரகாஷ் அவர்களின் இல்லத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து ஆதம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனில் வைத்துள்ளனர்.

கைது தொடர்பாக காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு யூடியூப் சேனலில் பெண் யூட்யூபர் ஒருவர் குறித்து தாமோதரன் பிரகாஷ் தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார வர்க்கத்தின் தவறுகளை யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் தாமோதரன் பிரகாஷ், சுமார் 8 மாதங்களுக்கு முன் யூடியூபில் பேசியதற்காக எந்த வித முன் விசாணையுமின்றி தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தாமோதரன் பிரகாஷ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தொடர்புடைய நபரிடம் சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்காமல், எந்தவித விசாரணையும் நடத்தாமல் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும்” வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!