யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த முடிவை திரும்பப்பெற வாய்ப்பில்லை என அரசின் உயர்நிலை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுபிஐ தொடர்பான புதிய விதிமுறையை மத்திய அரசு நேற்று(செப். 15) அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ. 2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும்.
அதேபோல, ரூ. 75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ. 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என கடைக்காரர்கள், வணிகர்கள் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசு ஏற்கெனவே ஒரு முடிவை எடுத்துவிட்டது. எனவே, அந்த முடிவைத் திரும்பப்பெற வாய்ப்பில்லை என அரசின் உயர்நிலை அதிகாரிகள் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், யுபிஐ அமைப்பின் நலனைக் கருத்தில் கொண்டும், அதன் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்தக் கட்டணங்களை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
