Ariyalur
கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் காதை பிய்த்த பெண்ணால் அரியலூரில் பரபரப்பு: மக்கள் நடமாட்டமுள்ள மார்க்கெட்டில், கறிக்கடை கத்தியை எடுத்து வந்து வெட்ட முயன்ற பெண்ணின் வெறிச்செயல்.
பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி. இவர் அரியலூர் காந்தி மார்க்கெட்டில், தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்தவர் கொளஞ்சி. செல்வராணியின் உறவுக்கார பெண்மணியான கொளஞ்சி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவசரத் தேவைக்காக 1 லட்சம் ரூபாய் பணத்தை செல்வராணியிடம் கடனாகப் பெற்றுள்ளார்.
கொடுத்த பணத்தை திருப்பி தராததால், அவ்வப்போது கொளஞ்சியிடம் செல்வராணி பணத்தை கேட்டு வந்துள்ளார். பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்திய கொளஞ்சி, ஒருகட்டத்தில் அல்லிநகரம் கிராமத்திலிருந்து அரியலூருக்கு இடம் மாற்றி குடி பெயர்ந்துள்ளார்.
அரியலூரில் கொளஞ்சியின் முகவரி தெரியாததால், பணத்தை திருப்பி பெற முடியாமல் செல்வராணி தவித்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கம் போல அரியலூர் காந்தி மார்க்கெட்டில், தனது காய்கறி வியாபாரத்தை செல்வராணி செய்து வந்துள்ளார்.
அப்போது கறி வாங்குவதற்காக கொளஞ்சி அரியலூர் காந்தி மார்க்கெட் வந்துள்ளார். இதனைக் கண்ட செல்வராணி, கொளஞ்சியிடம் தனது பணத்தை எப்போது திருப்பி தருவாய்? என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கறிக்கடையில் இருந்து கத்தியை எடுத்த கொளஞ்சி செல்வ ராணியை வெட்ட ஆவேசமாக பாய்ந்து வந்துள்ளார்.
உடனடியாக சுகாரித்துக் கொண்ட கறிக்கடைக்காரரும், பொதுமக்களும் கொளஞ்சியிடமிருந்து கத்தியை பிடுங்கி உள்ளனர். அப்போதும் ஆக்கிரமடங்காத கொளஞ்சி, செல்வ ராணியின் தலைமுடியை இழுத்துப் போட்டு அடித்து அவர் காதில் அணிந்திருந்த தோட்டை கையுடன் பிடித்து இழுத்துள்ளார்.
இதில் செல்வராணியின் காது அறுந்து தோடு தனியே விழுந்துள்ளது. இதனைக் கண்டு திகைத்த பொதுமக்கள் உடனடியாக செல்வராணியை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் அதிகம் உள்ள இடத்தில் கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணின், காதையே பிய்த்து தந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அரியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
