தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு வடக்கு தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன்காரணமாக இன்று மற்றும் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
