சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது; இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளது.
சென்னை, பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி, வருவாய், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, ரூ.1,200 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன், 20 லட்சம் சதுரஅடியில், புதிய தலைமைச் செயலகம் கட்ட, தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்கான அரசாணை கடந்த 8-ந்தேதி வெளியானது.
ஆனால், பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதால், தங்கள் – வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., அ.தி.மு.க., இ.கம்யூ.,உட்பட பல்வேறு கட்சிகளும், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.மேலும் புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், அந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் வருகிற 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறுகையில், பொதுமக்களுக்கோ அல்லது மீனவர்களுக்கோ எதிராக அரசு செயல்படாது. புதிய தலைமைச் செயலக திட்டம் மிகவும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. அதற்கான மதிப்பீட்டுப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பொதுத்துறை செயலாளருக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். அத்துடன் தலைமைச் செயலகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடம் குறித்த விவரத்துடன், புதிய அரசாணை வெளியிட அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
