ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக அப்போது புகாரை விசாரித்த காவல் அதிகாரிகளுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது உதவி ஆணையராக இருந்த யாஸ்மின், காவல் ஆய்வாளர்களாக இருந்த மகேஷ் குமார், ராஜலட்சுமி உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பின்னர் அந்த வழக்கு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், யாருடைய நிர்பந்தத்தின் கீழ் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, அப்போது உதவி ஆணையராக இருந்த யாஸ்மின் மற்றும் காவல் ஆய்வாளர்களான மகேஷ் குமார், ராஜலட்சுமி ஆகிய மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
முதலில் இந்த வழக்கை மகேஷ் குமார் விசாரித்த நிலையில், பின்னர் ஏவிஎஸ் பிரிவில் காவல் ஆய்வாளராக இருந்த ராஜலட்சுமி விசாரணை அதிகாரியாக மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, உயரதிகாரிகளின் அழுத்தத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்போது விசாரணை மேற்கொண்ட மூன்று அதிகாரிகளுக்கும் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
