தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கச்சேரி தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அமிர்த கண்ணன் (41). இவர் ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 8.45 மணியளவில் திருச்செந்தூரில் தனது அரசுப் பணிகளை முடித்துவிட்டு, ‘ஆக்டிவா’ ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
குரும்பூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் அவரது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. இக்கோர விபத்தில் பலத்த காயம் அடை்நத அவரை மீட்டுச் சிகிச்சைக்காக ஆத்தூர் சங்கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அமிர்த கண்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பழுதான லாரியைச் சாலையில் நிறுத்தி வைத்திருந்த லாரி ஓட்டுநர் சக்கையா என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
