சென்னை புளியந்தோப்பு 3வது பிரதான சாலையில் நேற்றிரவு 9 மணி அளவில், சிலர் கஞ்சா மற்றும் மதுபோதையில் மக்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த நபர், புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து கஞ்சா போதையில் சுற்றித் திரிந்த நபர்களை தேடியபோது ஓடிவிட்டனர். இதன்பிறகு அங்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு போலீசார் சென்றுவிட்டனர். இதன்பிறகு மீண்டும்அதே நபர்கள் அந்த பகுதிக்கு வந்து பொது இடத்தில் தகராறு செய்ததுடன்,”எங்களை பற்றி காவல் நிலையத்திற்கு யார் தகவல் கொடுத்தார்கள்’’ என்று கேட்டு கத்தியைக்காட்டி அங்கிருந்த பெண்களை மிரட்டியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில், இரவு 11 மணி அளவில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். துறைமுகம் சரக போலீஸ் உதவி கமிஷனர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். ‘’பொதுமக்களை மிரட்டிய நபர்களை கைது செய்கிறோம்’’ என்று உறுதி அளித்தனர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த நிலையில், புளியந்தோப்பு பி.கே காலனி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்கின்ற பப்லு (23), ஆகாஷ் (19), அஜய் (19) ஆகிய ரவுடிகளை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவர்கள்தான் நேற்றிரவு கஞ்சா , மதுபோதையில் பெண்களை மிரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
