தூத்துக்குடியில் மாலத்தீவுக்குப் படகு மூலம் கடத்துவதற்காகக் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 17 கிலோ கஞ்சா ஆயிலைப் பறிமுதல் செய்த ‘கியூ’ பிரிவு காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி ‘கியூ’ பிரிவு காவல்துறையினர், பூபாலராயர்புரத்திலிருந்து சுரேஷ்புரம் கடற்கரைச் சாலைக்குச் செல்லும் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசுக் காரை நிறுத்துமாறு சிக்னல் செய்தனர். ஆனால், கார் நிற்காமல் வேகமாகச் சென்றதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அந்த காரைபின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
காரில் இருந்த 4 பேரையும் பிடித்து நடத்திய தீவிர விசாரணையிலும், காரைச் சோதனை செய்தபோதும், அதில் மாலத்தீவுக்குப் படகு மூலமாகக் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோ ‘கஞ்சா ஆயில்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 17 கிலோ கஞ்சா ஆயில் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஏ.பி.சி. கல்லூரி எதிர்ப்புறம், ஜேசுதாசன் மகன் ரெக்ஸ்டன் (53), தெப்பக்குளம் தெரு சின்னத்தம்பி ரோசாரியோ (40), சுனாமி காலனி, சிலுவைப்பட்டி, மாசானம் மகன் சேர்மத்துரை (46), மறக்குடி தெரு சகாயம் மகன் அந்தோணி லிபிடஸ் (36) ஆகிய 4 பேரையும் ‘கியூ’ பிரிவு காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
கடல் வழியாக மாலத்தீவுக்குக் கஞ்சா ஆயில் கடத்த முயன்ற இச் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக் கடத்தல் பின்னணியில் தொடர்புடைய சர்வதேச நெட்வொர்க் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
