கோவை, அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் (KMCH) மருத்துவமனை அருகே சென்று கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென நடுரோட்டில் தீப்பற்றி மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நீலம்பூர் பகுதியில் இருந்து கோவை நகரை நோக்கி குடும்பத்தினருடன் கார் ஒன்று அவிநாசி சாலையில் வந்து கொண்டு இருந்தது. கார் கே.எம்.சி.எச் மருத்துவமனை எதிரே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென அடர்ந்த புகை வெளியேறுவதை ஓட்டுநர் கவனித்து உள்ளார்.
அபாயத்தை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாகச் சமயோஜிதமாகச் செயல்பட்டுக் காரைச் சாலையோரமாக நிறுத்தி விட்டு, உள்ளே இருந்த குடும்பத்தினர் அனைவரையும் உடனடியாக வெளியேறச் செய்து உள்ளார்.
அவர்கள் காரை விட்டு கீழே இறங்கிய சில வினாடிகளிலேயே, எஞ்சின் பகுதியில் பற்றிப் பிடித்த தீ காரின் அனைத்துப் பகுதிகளுக்கும் அதிவேகமாகப் பரவி மளமளவென எரியத் தொடங்கியது. சாலை நடுவே கார் கொழுந்து விட்டு எரிந்ததைக் கண்டு அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இருப்பினும் கார் எரிந்து சாம்பலானது.
சேதம் அடைந்தது. கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
காரில் ஏற்பட்ட மின்கசிவு (Short Circuit) காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
