இயற்கை வளமான நதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரூர் அமராவதி ஆற்றங்கரையில் தீப ஆரத்தி விழா விமர்சையாக நடைபெற்றது.
கரூர் ஜந்துரோடு பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சார்பில் அமராவதி தீப ஆரத்தி திருவிழா 2026 நடைபெற்றது.
முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான ஆன்மீகப் பக்தர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு, அமராவதி அன்னைக்கு தீப ஆரத்தி செலுத்தி வழிபட்டனர்.
தமிழகத்தின் ஜீவநதியான காவிரியின் துணை நதியாக விளங்கும் அமராவதி, மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை மற்றும் பழனிமலைத் தொடர்களுக்கு இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது.
நதிகளைத் தாயாக வணங்கும் பாரம்பரியத்தின் அடிப்படையில், தமிழகத்தின் முக்கிய

ஆறுகளில் புஷ்கரம் மற்றும் தீப ஆரத்தி விழாக்களை அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஆறுகளின் புனிதத்தையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள அமராவதி ஆறு பகுதியில் சன்னியாசிகள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர் இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
