திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியில் இருந்து சாம்பட்டி வழியாக பொடங்குப்பட்டி வரை செல்லும் சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருவதோடு அதிக அளவிலான வாகனங்களும் சென்று வருகின்றது.
7 கிமீ தூரமுள்ள இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதுடன் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட விரைந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்

ஆத்திரம் அடைந்த மக்கள் மணப்பாறை – துவரங்குறிச்சி பிரதான சாலையில் பொய்கைபட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து உரிய உத்தரவாதம் அளித்து சாலை

அமைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி மக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மணப்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சண்முகம் மற்றும் பொறியாளர் செழியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
