இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை காட்டி ரீல்ஸ் வெளியிடும் நபர்களை கண்டறியும் வகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் சோஷியல் மீடியா கண்காணிப்பு பிரிவினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில் பலர் சமுதாய மோதலை தூண்டும் விதமாகவும், இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பது போலவும், நாட்டு வெடிகுண்டுகளை வீசி அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மறைந்த சமுதாயத் தலைவர்களின் போட்டோக்களை பயன்படுத்தியும் பலர் சட்ட விரோதமாக ரீல்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற பதிவுகளையும், பதிவிடுபவர்களையும் எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் சோஷியல் மீடியா கண்காணிப்பு பிரிவினர் ஆய்வு செய்து புகாரளித்து வருகின்றனர். அதனடிப்படையில் சைபர்கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி சோஷியல் மீடியா செல் அலுவலர்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் இன்ஸ்டா ஐடி மூலம் அவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை மட்டும் இதுபோன்று 86க்கும் மேற்பட்ட இன்ஸ்டா பக்கங்களை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரை சேர்ந்த பழனி மகன் சீனு(21). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் போட்டோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதன் மூலம் ஜாதி ரீதியிலான மோதலை தூண்டும் விதமாகவும், பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தெரிய வந்த முத்தையாபுரம் எஸ்ஐ பாண்டியன் அளித்த புகாரின் பேரில் ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த இன்ஸ் பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார், தலைமறைவான சீனுவை தேடி வருகின்றனர். மேலும் சீனுவின் இன்ஸ்டா பக்கத்தையும் முடக்க பரிந்துரைத்துள்ளனர்.
