கோவை, மதுக்கரை மற்றும் எல் & டி பைபாஸ் சுற்று வட்டாரப் புறநகர பகுதிகளில் திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழையால், நீலாம்பூர் சுங்கச்சாவடியின்

மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, மதுக்கரை, நீலாம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரெனக் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. மழை பெய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றும் வீசியது.
இதில் நீலாம்பூர் சுங்கச்சாவடி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ராட்சத இரும்பு மேற்கூரைகள் சூறாவளி காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் பெயர்ந்து, காற்றில் பறந்து தூக்கி வீசப்பட்டன.
மேற்கூரைகள் சேதம் அடைந்து காற்றில் பறந்ததால், சுங்கச்சாவடி ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பதறி அடித்து ஓடினர்.
இதனால் கட்டணம் வசூலிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு, எல் & டி பைபாஸ் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட மதுக்கரை பகுதியில் இருந்து எல்லைப் பகுதியான வாளையார் வரை மிகச் சிறப்பான முறையில் கனமழை கொட்டித் தீர்த்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த அதிரடி மழையால் தார்ச் சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாகச் சென்றனர்.
வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவினாலும், சுங்கச்சாவடி சேதத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
