Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசைத்தறியில் ரஜினி உருவம், ‘ஜெயிலர் 2’ வடிவம்–கரூரில் சாதனை

விசைத்தறியில் ரஜினியின் உருவப்படத்துடன் “ஜெயிலர் 2” எழுத்து வடிவம் – கரூர் நெசவாளி சாதனை.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. நெசவுத் தொழிலாளியான இவர், பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நெசவுத் தொழிலை அடுத்தகட்ட தொழில்நுட்பத்துடன் இணைத்து புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், விசைத்தறியில் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தை துணியில் நேர்த்தியாக நெய்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக, தனது மகள் வரைந்து கொடுத்த திருவள்ளுவர் உருவப்படத்தை துணியில் நெய்து அசத்தியிருந்தார் பிரபு.

இதனைத் தொடர்ந்து, தான் தீவிரமாக ரசிக்கும் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தை விசைத்தறியில் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்.

இதற்காக, விரைவில் வெளியாக உள்ள “ஜெயிலர் 2” திரைப்படத்தில் இடம்பெறும் ரஜினிகாந்தின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, விசைத்தறியில் உருவப்படத்தை நெய்யும் பணியை தொடங்கினார்.

சுமார் இரண்டு மாத காலமாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து, பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரஜினிகாந்தின் உருவப்படத்தை துணியில் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.

மேலும், அந்த துணியில் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் எழுத்து வடிவத்தையும் இணைத்து 63*17 அங்குலம் அளவில் உருவாக்கியுள்ளார். இதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அங்கீகாரம் வழங்கி உள்ளது.

நெசவுத் தொழிலில் புதுமையை புகுத்த வேண்டும் என்ற தனது முயற்சியின் ஒரு பகுதியாக இதனை மேற்கொண்டதாக கூறும் பிரபு, தனது இந்த முயற்சிக்கு சாதனைப் புத்தகத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விசைத்தறி மூலம் திருவள்ளுவர் உருவப்படம் தொடங்கி, தற்போது நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படம் வரை நெய்து சாதனை படைத்துள்ள கரூர் நெசவாளி பிரபுவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!