அரியலூர் நகராட்சி தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள், பணி புறக்கணித்து போராட்டம்: வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் முகம் சுளிப்பு.
அரியலூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி, கடந்த மூன்று ஆண்டுகளாக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதமே துப்புரவு பணியாளர்களுக்கான ஒப்பந்தம் நிறைவுற்ற நிலையில், அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
நாளொன்றுக்கு ஊதியமாக ரூபாய் 382 ரூபாய் தரப்பட்டு வந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் வழங்கும் ஊதியம் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று கூறி 80-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் இன்று பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாதத்தில் 30 நாட்கள் பணி செய்துவிட்ட போதிலும், தங்களுக்கு 26 நாட்கள் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தும் தூய்மை பணியாளர்கள்,
அரிசி விலை கிலோ ₹80 சர்க்கரை விலை கிலோ ₹80, பருப்பு விலை கிலோ ₹200 எண்ணெய் லிட்டருக்கு 200 ரூபாய் என அனைத்து அன்றாட வீட்டு உபயோக பொருட்களும் கடுமையாக இதை உயர்ந்துள்ள நிலையில், எங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஊதியமாக கிடைக்கும் இந்த 8000 என்பது போதுமானதாக இல்லை என நகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
நகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் ஊரையே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு, ஊதிய உயர்வு அளித்திட வேண்டுமென நகராட்சி தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
