இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுவிஸ் அதிபர் கை பார்மெலின் ஆகியோர் முன்னிலையில்,இன்று இந்தியாவும் சுவிஸ் கூட்டமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன. பின்னர் இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தில் பொதுவான நோக்கங்கள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை கொண்டுள்ளன. உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு இது மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் அல்லது மேற்கு ஆசியா என எங்குப் பிரச்சினை என்றாலும், அமைதிக்கான ஒவ்வொரு அர்த்தமுள்ள முயற்சிக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். EFTA நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை (TEPA) இரு நாட்டு தலைவர்களுமே இந்த நிகழ்வில் சுட்டிக்காட்டினர். இது அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு மற்றும் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
சுவிஸ் அதிபர் கை பார்மெலினுடனான கூட்டறிக்கையின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “இந்தியா-சுவிட்சர்லாந்து இடையிலான நட்பு பல நூற்றாண்டுகள் பழமையானது… புத்தாக்கம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவை இன்று நமது உறவின் வலுவான தூண்களாகத் திகழ்கின்றன.
சுவிட்சர்லாந்திற்கான இந்தியாவின் ஏற்றுமதிக்குச் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு நடைமுறைகளை மேலும் எளிதாக்கவும் நாங்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இதன் மூலம், சுவிட்சர்லாந்திற்கு மேற்கொள்ளப்படும் இந்தியாவின் விவசாயம், மருந்துகள், ஜவுளி மற்றும் பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும்; அத்துடன் வங்கி, காப்பீடு, உணவு பதப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மை (sustainability) போன்ற முக்கியத் துறைகளில் புதிய சுவிஸ் முதலீடுகளை நாங்கள் ஈர்ப்போம் என்றார்.
குடியேற்றம் மற்றும் இடப்பெயர்வு தொடர்பான கூட்டாண்மை ஒப்பந்தம் மற்றும் இளம் தொழில்முறை நிபுணர்களுக்கான ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம், சுவிட்சர்லாந்தில் இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது சவால்களை எதிர்கொள்ள அவசியமானது என்று இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் ஒருசேர கருதுவதாகப் பிரதமர் மோடி கூறினார்.
