Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏஐ ஆபாச வீடியோ விவகாரம்: தெலங்கானா சைபர் கிரைம் வழக்குப்பதிவு

ஏஐ ஆபாச வீடியோ விவகாரம்:தெலங்கானா சைபர் கிரைம் வழக்குப்பதிவு

நடிகை ஜான்வி கபூரின் ஆபாசமாக மாற்றப்பட்ட போலி காணொலிகள் மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி மீதான அவதூறு பதிவுகள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் குற்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர். திரையுலக பிரபலங்களின் உருவங்களை நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக வக்கிர புத்தியுடன் மாற்றி அமைக்கும் அத்துமீறல்கள் இணையத்தில் தொடர்ந்து வருகின்றன. முன்னதாக, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் முன்னணி நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவான ‘தேவரா’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.

இந்த பாடலில் இடம்பெற்ற காட்சிகளை சில சமூக விரோதிகள் திருடி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருள் மூலம் ஜான்வி கபூரை ஆடையின்றி ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றினர். இந்த அருவருக்கத்தக்க காணொலி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்தது. புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தெலங்கானா மாநில சைபர் கிரைம் போலீசார், ‘சம்பந்தப்பட்ட இணையதள பக்கங்களை உடனடியாக முடக்குமாறு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்; இணைய முகவரியை கண்காணித்து இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட விஷமிகளை விரைந்து கைது செய்வோம்’ என்று எச்சரித்துள்ளனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், தெலுங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி மற்றும் நடிகை சுரேகா வாணி ஆகியோரின் புகைப்படங்களை அவதூறாக இணைத்து ஆபாசமாக பதிவிட்ட சமூக வலைதள கணக்கிற்கு எதிராகவும் வழக்கு பாய்ந்துள்ளது. இது தொடர்பாக கைலாஷ் சஜ்ஜன் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரில், ‘நீல நிற அங்கீகார குறியீடு கொண்ட எக்ஸ் தள பக்கத்தில், முதல்வரையும் நடிகையையும் தவறான முறையில் தொடர்புபடுத்தி மிகவும் கொச்சையான பதிவு பகிரப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக வன்மத்தை தூண்டவும், பெண்களின் மாண்பை சீரழித்து மலிவான விளம்பரம் தேடவும் திட்டமிட்டு இந்த அநாகரிக செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார். புகாரின்பேரில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், சமூக வலைதளங்களின் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அடுத்தவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

அந்தரங்கத்தை படம்பிடிக்க உங்களுக்கு உரிமையில்லை;

சமூக வலைதளத்தில் விரிவான கண்டன பதிவை வெளியிட்டுள்ள ஜான்வி கபூர், ‘தொழில்நுட்பத்தை குற்றவியல் நோக்குடன் தவறாகப் பயன்படுத்தி பெண்களின் அனுமதியின்றி அவர்களின் உடலை ஆபாசமாக சிதைப்பது பாலியல் பலாத்காரத்திற்கு சமமான கொடுங்குற்றமாகும். திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள பெரும்பாலான பெண்களும் இதுபோன்ற கொடூர அத்துமீறல்களை நாளுக்கு நாள் சந்தித்து வருகின்றனர். ஒரு பெண்ணின் உடல், விருப்பம் மற்றும் எல்லைகளை தீர்மானிக்கும் உரிமை முழுமையாக அவருக்கு மட்டுமே சொந்தமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒரு பெண் சம்மதம் தெரிவித்தாலும், ஆறாவது நாள் அவர் மறுத்தால் அந்த மறுப்பை நாகரிகமாக மதிக்க பழக வேண்டும். ஒரு பெண் குட்டை பாவாடை அணிந்திருந்தால் கூட அவரது அந்தரங்கத்தை படம்பிடிக்கவோ அல்லது அவரது உடலை தவறாகப் பயன்படுத்தவோ எவருக்கும் உரிமையில்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய வக்கிர புத்தி இணைய உலகில் கொடூரமாக பரவி வருகிறது. வெறுமனே மகள்களைப் பாதுகாப்போம் என்று சொல்வது மட்டுமே தீர்வாகாது; அடுத்தவரின் கண்ணியத்தை சீரழிக்க யாருக்கும் உரிமையில்லை என்ற மனப்பக்குவத்தை ஆண்களுக்கு கற்றுக்கொடுப்பதே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்களை வெறும் காட்சிப் பொருளாகப் பார்க்காமல் சக மனிதராக மதிக்கும் நற்பண்பு சமுதாயத்தில் எப்போது உருவாகப் போகிறது?’ என்று மிகவும் ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு நடிகை அறிவுரை;

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகையான யாமி கவுதம் (35), ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பொது நிகழ்ச்சிகளில் நேரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைக்கப்பட்ட போலி புகைப்படங்களை வெளியிடக் கூடாது. பிறரின் தனிப்பட்ட சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்’ என்றார்.

error: Content is protected !!