புகலூர் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு – விவசாய நிலங்கள் பாதிப்பு: உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் அதிமுக சார்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் புஞ்சை தோட்டக்குறிச்சி, கடம்பன்குறிச்சி, நன்னியூர் புதூர், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் , புகலூர் வாய்க்காலில் சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாகக் கூறி மாவட்ட

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
கழிவுநீரால் விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் மற்றும் கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தண்ணீர் கேன்களில் தண்ணீரை எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் கூறியதாவது:
புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலையிலிருந்து அதிகளவில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கழிவுநீரை உரிய முறையில் சுத்திகரிப்பு செய்யாமல், நேரடியாக வாய்க்காலில் திறந்து விடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், இதே சர்க்கரை ஆலைக்கு கரும்பை விவசாயம் செய்து வழங்கி வருகின்றனர். ஆனால், ஆலை நிர்வாகம் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால், வாய்க்காலில் கழிவுநீர் கலந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் கலப்பால் கிணறுகளில் இருந்த மீன்கள் இறந்துள்ளதுடன், நீர் விஷத்தன்மை கொண்டதாக மாறியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்து, தண்ணீர் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், இதுவரை பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை.
கழிவுநீர் கலப்பால் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி ஆற்றுக்கு அருகிலேயே இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தொடரும் இந்தப் பிரச்சினையால் நிலத்தின் தன்மையே மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், கழிவுநீர் வெளியேற்றத்தை உடனடியாக தடுத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
இல்லையெனில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
