கர்நாடக மாநிலத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகள் நாட்றம்பள்ளியில் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், 3 நகைக்கடை உரிமையாளர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் முலுபாகுல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுக்கோவில் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (48) என்பவரை கர்நாடக போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் முனிராஜை காவலில் எடுத்த முலுபாகுல் காவல் நிலைய போலீசார்தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில்
அப்போது, கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 600 கிராம் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை நாட்றம்பள்ளியில் உள்ள 3 நகைக்கடைகளில் விற்பனை செய்ததாக முனிராஜ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட கர்நாடக போலீசார் நாட்றம்பள்ளி பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 நகைக்கடை உரிமையாளர்களையும் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடக போலீசார் நகைக்கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்துவதை அறிந்த நகைக்கடை விற்பனையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் நகைகள் உண்மையில் அந்த 3 நகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கர்நாடக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..
