கிருஷ்ணராயபுரத்தில் நரிக்குறவர் காலனி மாணவ, மாணவிகளின் கல்விக்காக எம்.எல்.ஏ. சத்யா தனது சொந்த மாத ஊதியத்தில் வாகன வசதி.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் ஊராட்சி, மலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சத்யா நகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதற்காக, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற

உறுப்பினர் சத்யா தனது மாத ஊதியத்தில் இருந்து புதிய வாகன வசதியை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சத்யா நகரில் சுமார் 74 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களில் பலர் தொழில் நிமித்தமாக பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்கும், திருவிழாக் காலங்களில்

வெளியூர்களுக்கும் சென்று வருவதால், அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால், மாணவ, மாணவிகளின் பள்ளிப் படிப்பு தடைபடாமல் தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து

வந்தனர்.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யாவிடம், அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் போக்குவரத்து வசதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது, குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று கல்வி பயில உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
அதன்படி, தனது மாத ஊதியத்தில் இருந்து புதிய வாகனத்தை ஏற்பாடு செய்து, சத்யா நகரைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியைச் செய்து கொடுத்தார்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து புதிய வாகனத்தின் ரிப்பனை வெட்டி, மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சேவையைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சத்யா, அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வீடு கட்டும் திட்டம், நாடக மேடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி விரைவில் அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தங்களது குழந்தைகளின் கல்விக்காக வாகன வசதியை ஏற்படுத்திக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் சத்யாவுக்கும், தமிழக முதல்வருக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். பெண்கள் பாரம்பரியமான கருகமணி, பாசி மற்றும் பவள மணி மாலைகளைச் சட்டமன்ற உறுப்பினருக்கு அணிவித்து தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
கல்வி பாதிக்கப்படாமல் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, சத்யா நகர் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள், சத்யா நகர் பொதுமக்கள், கிருஷ்ணராயபுரம் வட்டாரக் கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
