சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் கூட்டம் நாளை (10ம் தேதி) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், அந்தந்தப் பகுதி அலுவலகங்களில் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடத்தப்படுகிறது. இதன்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 பகுதிகளில் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் குடிநீர் விநியோகம், கழிவுநீர் பிரச்சினைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, கட்டணங்கள், நிலுவையில் உள்ள புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் தொடர்பான குறைகள் மற்றும் சந்தேகங்களை நேரில் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்தக் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்களது பிரச்சினைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
