தூத்துக்குடி தருவைக்குளம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற 30 மீனவர்கள், மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருவைக்குளத்தில் இருந்து 3 விசைப் படகுகளில் மொத்தம் 30 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தருவைக்குளத்தைச் சேர்ந்த மிக்கேல், ராஜன், சங்கர் ஆகியோரது விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, தூத்துக்குடி மீனவர்கள் 30 பேரை மாலத்தீவு கடற்படை சிறைபிடித்ததால் மீனவர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாலத்தீவு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே 30 தமிழக மீனவர்களை மாலத்தீவு கடற்படை சிறைபிடித்ததால் தருவைக்குளம் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
