தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை நாளொன்றுக்கு சுமார் 19,000 முதல் 20,000 மெகாவாட் வரை உள்ளது. கடந்த மே, ஜூன் மாதங்களில் தேர்தல் காலத்தில்கூட மின்சாரத் தேவை உச்சத்தை எட்டி 21,000 மெகாவாட் அளவைத் தொட்டது. அப்போதுகூட வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யாமல், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட மின்சாரம் மற்றும் உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டே மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வந்ததாகக் மின்துறை பொறியாளர் அமைப்பு காந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதுவும் மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் மாலை நேரங்களில் மட்டுமே இவ்வாறு மின்சாரம் வாங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் நேரம் ஆறு மணி நேரமாக இருந்தாலும், மின்சாரக் கொள்முதலுக்கான நிபந்தனைகளின்படி குறைந்தபட்சம் எட்டு மணி நேரத்திற்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக நாளொன்றுக்கு சுமார் ரூ.77 கோடி செலவிடப்படுவதாகவும், மாதாந்திர மின்சாரக் கொள்முதல் செலவு சுமார் ரூ.2,410 கோடியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
