தமிழகத்தில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயரவில்லை என்றும், விலை உயர்வு என்பது எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்படும் ஒரு பொய்யான பிம்பம் என்றும் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறினார்.
இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், “தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, சக்கரை, எண்ணெய், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஆனால், உணவுத்துறை அமைச்சர் அரிசி விலை உயரவில்லை என கூறுகிறார். அவர் அரிசி வாங்கி சோறு தான் சாப்பிடுகிறாரா? என்பது தெரியவில்லை என காட்டமாக விமர்சித்து உள்ளார். அவரது மயிலாப்பூர் தொகுதிக்கே சென்று ஒவ்வொரு கடையிலும் போய் விசாரிக்கலாம்| என்ற சவாலை அவருக்கு விடுக்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய பரந்தாமன், தீபஒளித் திருநாள் நெருங்கி வரும் நிலையில் ஏழை, எளிய மக்கள் பண்டிகை நாளை கொண்டாட முடியாத படி அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதனைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் விஜய் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்..? இது குறித்து துறை ரீதியாக அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்துள்ளாரா..? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதே போல மின் பற்றாக்குறை ஒரு பக்கம் எகிறியுள்ளது. மின்சாரம் ஏன் இல்லை எனக் கேட்டால் காற்று இல்லை, தண்ணீர் இல்லை என காரணம் கூறுகின்றனர். துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் ஓடிவிட்டார். மின் பற்றாக்குறை ஏற்படுவது தெரியுமா? தெரியாதா? அரசு நிர்வாகத்தை நடத்துகிறீர்களா இல்லையா? மக்களுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது, பற்றாக்குறை எவ்வளவு, மின்சாரத்தை எப்படி வாங்க வேண்டும் என்பது கூட தவெக அரசுக்கு தெரியாதா எனவும் பரந்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
