Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக ஆட்சியால் தமிழக உரிமைகளுக்கு ஆபத்து – சீமான் எச்சரிக்கை!

தவெக ஆட்சியால் தமிழக உரிமைகளுக்கு ஆபத்து –சீமான் எச்சரிக்கை!

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவரை தவெக அரசு இதுவரை நியமனம் செய்யாதது ஏன்? அதிமுக்கியப் பதவியை நிரப்பாமல் அலட்சியம் செய்வது தமிழ்நாட்டின் நீருரிமையைக் காவுகொடுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டின் உயிராதாரமான நீருரிமைகளைப் பாதுகாக்கும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியும் அனுபவமும் கொண்ட அதிகாரியை இதுநாள் வரை நியமிக்காமல் காலந்தாழ்த்திவரும் தவெக அரசின் நிர்வாக அலட்சியம் வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கடந்த 09.10.26 அன்று வெளியிட்டுள்ள அரசாணை எண்: 71இல், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவிற்கு இதுவரை முழுநேர துணைத்தலைவரை தவெக அரசு நியமிக்காததால், உயர்மட்ட முடிவெடுத்தலிலும், பணித்தொடர்ச்சியிலும் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் சொந்த ஆவணமே இவ்வளவு தெளிவாக எச்சரித்தும், உரிய நியமனத்தை தவெக அரசு இதுவரை செய்யாமல் இருப்பது ஏன்? காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் முந்தைய துணைத்தலைவர் கடந்த 28.06.26 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாத இறுதியில் காலியான அம்முக்கியப் பதவியை நிரப்ப அக்டோபர் மாதம்வரை தவெக அரசு அனுமதி வழங்காதது ஏன்?

தற்போது அனுமதி வழங்கிய பிறகும் இன்றுவரை அப்பொறுப்பிற்குப் பொறியாளரை நியமனம் செய்யாததற்கு என்ன காரணம்? பதவியை நிரப்ப அனுமதி வழங்குவதோடு அரசின் கடமை முடிந்துவிட்டதா? கோப்புகளில் அனுமதி வழங்கிவிட்டு, களத்தில் பணியிடம் காலியாக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இப்பதவியை நிரப்புவதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என்று அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய அதிமுக்கிய பதவியை நிரப்புவதற்கு அப்படியே கூடுதல் செலவு ஏற்பட்டால்தான் என்ன? எதற்காக இந்த தாமதம்? காவிரி ஆற்றில் போதுமான நீர் வராத நிலையிலும், வெற்று விளம்பரத்திற்காக நீரை திறக்கிறேன் என்று கூறி சென்னையிலிருந்து மேட்டூர் வரை சென்று வருவதற்கு மட்டுமே 6 கோடி ரூபாய் செலவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தம்முடைய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் காவிரி தொழில்நுட்பக் குழுமத் துணைத்தலைவரை நியமித்தால் கூடுதல் செலவாகும் என்று காரணம் கூறுவது வெட்கக்கேடானது.

காவிரி தொழில்நுட்பக் குழுமம் என்பது வழக்கமான வெறும் நிர்வாக அலுவலகம் மட்டுமல்ல. காவிரி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம்–ஆழியாறு, பாலாறு, பெண்ணையாறு, நெய்யாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீருரிமைச் சிக்கல்களைக் கையாளும் கோடிக்கணக்கான மக்களுடன் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய அதிமுக்கிய நிர்வாக அமைப்பாகும். மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடனான நீர் சிக்கல்களில் தமிழ்நாட்டின் வாதங்களுக்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களைத் தயாரிக்கும் பெரும்பொறுப்பை வகிக்கும் அமைப்பாகும். அதன் தலைமைப் பொறுப்பை ஏற்பவருக்கு நிலுவையிலுள்ள 30க்கும் மேற்பட்ட நதிநீர்ச் சிக்கல் வழக்குகளைத் திறம்படக் கையாளும் பொறுப்புணர்வும், உடனடி முடிவெடுக்கும் திறனும், துறைசார் அனுபவத் தொடர்ச்சியும் அவசியம் என்று அரசாணையே வலியுறுத்துகிறது.

அத்தனை அதிமுக்கிய அமைப்பின் முக்கியப் பதவியைக் காலியாக வைத்திருப்பது தமிழ்நாட்டின் நதிநீர் சட்டப் போராட்டங்களைப் பலவீனப்படுத்தி எதிர்த்தரப்பு மாநிலங்களுக்கு சாதமாக்கிவிடாதா? மேகதாது உள்ளிட்ட தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையைப் பறிக்கும் வழக்குகள் நமக்கு எதிராக அமைந்துவிடாதா? அதைத்தான் விரும்புகிறதா தவெக அரசு? அதற்குத்தான் திட்டமிட்டு இப்பதவியை நிரப்பாமல் வைத்துள்ளதா? தமிழ்நாட்டின் நீருரிமையைப் பாதுகாக்கும் அதிமுக்கியப் பொறுப்பிற்குத் தகுதியான ஒருவரை நியமிப்பதற்கே தவெக அரசு இத்தனை காலதாமதம் செய்கிறது என்றால், தமிழ்நாட்டின் நதிநீர் சிக்கல்களைத் தீர்த்து, நம்முடைய நதிநீர் உரிமையைப் பெறுவதுதான் எப்போது? இதுதான் தவெக அரசு தமிழ்நாட்டின் நீரூரிமையைக் காக்க அளிக்கும் முன்னுரிமையா? இதுதான் தமிழ்நாட்டு விவசாயிகளைக் காக்கும் முறையா? தவெக அரசின் நிர்வாகத்திறமையின்மையும், அலட்சியச்செயல்பாடும் தொடர்ந்தால் தமிழ்நாடு தன்னுடைய உரிமைகளை இழக்கும் பேராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

எனவே, அரசாணை 71 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நீர் விவகாரங்களைக் கையாளும் அறிவும் அனுபவமும் கொண்ட, தகுதியான தலைமைப் பொறியாளரை காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவராக உடனடியாக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!